பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காடு அணையில் மூழ்கி இறந்ததை எங்களால் நம்ப முடியவில்லை என்று அவர் நடித்து வந்த பீஸ் படத்தின் உதவி இயக்குனர் வினயன் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.மலையாள சினிமாவில் சமீபத்தில் பிஜு மேனன் பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப் பரபரப்பாக ஓடிய படம் ஐயப்பனும் கோஷியும். பிரபல இயக்குனர் சச்சி டைரக்ட் செய்த இந்தப் படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருந்தவர் அனில் நெடுமங்காடு (48).
இந்தப் படத்தில் அனில் பேசிய சில டயலாக்குகள் மலையாள சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. நடிகர் அனில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நாடகம், டிவி என கலை உலகில் இருந்து வந்து போதிலும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தான் மலையாள சினிமாவில் நுழைந்தார். அதற்குள் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், மலையாள சினிமாவில் பரபரப்பாகப் பேசப்படும் நடிகர்களில் ஒருவர் ஆனார்.
இந்நிலையில் ஜோஜு ஜார்ஜ் நாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் இவர் ஒரு சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று படப்பிடிப்பு முடிந்த பின் அருகில் உள்ள மலங்கரா என்ற அணையில் நன்பர்களுடன் குளிக்கச் சென்ற போது அணையில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். நடிகர் அனிலின் இந்த திடீர் மறைவு மலையாள சினிமா உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அனிலின் மறைவு குறித்து இவர் கடைசியாக நடித்து வந்த பீஸ் படத்தின் உதவி இயக்குனர் வினயன் கூறியது: கடந்த 20 நாட்களாக நடிகர் அனில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.
கடந்த 2 நாட்களாக அவருக்குப் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் அவரது அறையில் தான் தங்கியிருந்தார். எப்போதும் எங்களிடம் அனில் மிகவும் அன்பாகவும், நகைச்சுவையாகவும் பழகி வந்தார். அவரது திடீர் மறைவை எங்களால் நம்பவே முடியவில்லை. நேற்று மாலையில் அவர் நண்பர்களுடன் அணைக்குக் குளிக்கச் சென்றார். அவருக்கு நன்றாக நீச்சல் தெரியும். ஆழமான இடத்தில் அவர் மூழ்கியதாக நண்பர்கள் தெரிவித்தனர். 8 நிமிடங்களில் அவரை மீட்டு விட்டனர். ஆனாலும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார். நடிகர் அனிலின் மறைவுக்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.