பாஜக-வின் தேசியத் தலைவர் அமித்ஷா, அக்கட்சியின் பொற்காலம் எப்போது வரும் என்பது குறித்து பேசியுள்ளார்.
பாஜக தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதை கொண்டாட மகாராஷ்டிராவில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு அக்கட்சி ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பாஜக-வின் தேசியத் தலைவர் அமித்ஷா சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், பாஜக-வின் பொற்காலம் எப்போது வரும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அமித்ஷா பேசுகையில், `வெறும் 10 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி பாஜக. இன்று 11 கோடி பேர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
நாடு முழுவரும் தாமரை மலர்ந்து வருகிறது. தியாகம் செய்வதற்கான கட்சியாக பாஜக உருவெடுத்து வருகிறது. மக்கள் நம்மை நம்புகிறார்கள். பாஜக-வின் பொற்காலம் இன்னும் வரவில்லை. எப்போது நாம் மேற்கு வங்கத்திலும் ஒடிசாவிலும் ஆட்சி அரியணையில் ஏறுகிறோமோ அப்போதே நமது பொற்காலம் ஆரம்பமாகும்.
மீண்டும் நாம் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றியடைய வேண்டும். தொண்டர்கள் அதற்கு அயராது உழைக்க வேண்டும்’ என்று பேசியுள்ளார்.