பலாத்கார வழக்கில் ஜாமீனில் வெளிவந்த 10 நாளில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரம்...!

by Nishanth, Dec 31, 2020, 19:42 PM IST

பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் ஜாமீனில் வெளிவந்த 10 நாளில் 3 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தையை திடீரென காணவில்லை. காலையில் எழுந்து பார்த்ததும் குழந்தையைக் காணாததால் திடுக்கிட்ட பெற்றோர், பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவர்கள் ராய்கட் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த ஆதேஷ் பாட்டில் என்பவர் அந்த குழந்தையின் வீட்டுக்கு அருகே நடமாடியது தெரியவந்தது. இவர் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்று சென்றிருந்தார். பல மாத சிறைவாசத்திற்குப் பின்னர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் இந்த ஆசாமி ஜாமீனில் வெளியானது தெரியவந்தது.

இதையடுத்து ஆதேஷ் பாட்டிலுக்கு போலீசார் வலை விரித்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவானார். இதற்கிடையே அங்குள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் முட்புதரில் சிறுமி பலத்த காயங்களுடன் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த குழந்தையை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அந்தக் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆதேஷ் பாட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியைப் பலாத்காரம் செய்து கொன்றதாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் ஆதேஷ் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜனவரி 8ம் தேதி வரை ஆதேஷ் பாட்டிலைக் காவலில் வைத்து விசாரிக்கப் போலீசுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 3 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்ற சம்பவம் ராய்கட் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை