பாஜகவின் தடுப்பூசியை நம்ப முடியாது, நான் ஊசி போட மாட்டேன் - அகிலேஷ் யாதவ்

by Nishanth, Jan 2, 2021, 20:35 PM IST

பாஜகவின் கொரோனா தடுப்பூசியை எந்தக் காரணம் கொண்டு நம்ப முடியாது. எனவே நான் தடுப்பூசி போட மாட்டேன் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது. இன்று நாடு முழுவதும் தடுப்பூசிக்கான ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதையடுத்து விரைவில் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த தடுப்பூசி தொடர்பாக நாட்டில் சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் என்றும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பாஜகவின் தடுப்பூசியை நம்ப முடியாது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் லக்னோவில் கூறியது: பாஜகவின் தடுப்பூசியை நம்ப முடியாது. இதனால் நான் இப்போது தடுப்பூசி போடப் போவதில்லை. எங்களது அரசு உத்திர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் எங்களது கட்சி ஆட்சிக்கு வரும் என்று அவர் மேலும் கூறினார்.

அகிலேஷ் யாதவின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்திர பிரதேச மாநில துணை முதல்வரும், பாஜக தலைவருமான கேசவ பிரசாத் மவுரியா கூறுகையில், அகிலேஷ் யாதவின் இந்தக் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அவர் நம்முடைய நாட்டின் டாக்டர்களையும், விஞ்ஞானிகளையும் அவமானப்படுத்தி உள்ளார். அகிலேஷ் யாதவுக்கு இந்த தடுப்பூசியில் நம்பிக்கை இல்லை. அதுபோல உத்திர பிரதேச மாநில மக்களுக்கும் அகிலேஷ் மீது நம்பிக்கை இல்லை. அவர் தன்னுடைய கருத்துக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், கொரோனா தடுப்பூசியை அரசியலாக்க அகிலேஷ் யாதவ் முயற்சிக்கிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். அவருக்கு அரசியல் தவிர வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை என்பதையே இது காட்டுகிறது என்று கூறினார். கொரோனா தடுப்பூசி குறித்து யாரும் வதந்தி பரப்ப கூடாது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை