இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 20ம் தேதி வரை இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் ஏற்கனவே பரவியுள்ள கொரோனா வைரசின் பீதி மக்களிடையே இன்னும் அகலாத நிலையில், இங்கிலாந்திலிருந்து பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் மேலும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இங்கிலாந்தில் இன்று முதல் ஒன்றரை மாதத்திற்கு மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் மார்ச் முதல் ஜூன் வரை ஏற்படுத்தப்பட்ட முதல்கட்ட லாக் டவுனுக்கு சமமான அதே கட்டுப்பாடுகளுடன் தற்போது மீண்டும் லாக் டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கான நிறுவனங்கள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். மற்ற அனைத்தும் மூடப்படும். பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உருமாறிய கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் இங்கிலாந்துக்கான விமான போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. வரும் குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துகொள்வதாக இருந்தது.
ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இந்தியா வர முடியாது என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்தார். இதனால் அவரது இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்தில் மீண்டும் லாக் டவுன் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்குள்ள இந்தியத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 20ம் தேதி வரை தூதரக பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும் என்று இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.