பாஜக-வின் தலித் எம்.பி-க்கள் சொந்த கட்சிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், `அம்பேத்கரின் கனவை நிறைவேற்றுவது நமது லட்சியம்’ என்று மோடி தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று இதுவரை எதிர்கட்சிகள் சொல்லி வந்த நிலையில், பாஜக எம்.பி-க்கள் சிலர் இதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச நாகினா தொகுதியைச் சேர்ந்தவர் எம்.பி யஷ்வந்த் சிங். தலித்தான இவர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில், தலித்துகளுக்கு பாஜக அரசு கடந்த 4 ஆண்டுகளில் ஒன்றும் செய்யவில்லை என்று கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்.
இதைப்போலவே உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக தலித் எம்.பி ஒருவர் பிரதமருக்கு, `நாட்டில் தலித்துகளின் மாண்பை காப்பாற்றுங்கள்’ என்று கூறி பகிரங்கமாக கடிதம் எழுதி பரபரப்பைக் கிளப்பினார். இப்படி சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு வருவதை பாஜக-வும் பிரதமர் மோடியும் துளியும் எதிர்பார்க்கவில்லை.
இதை சரி கட்டுவதற்காகவே, `கிராம சுவராஜ்’ பிரசாரத்தை பாஜக மேற்கொள்ள உள்ளது. அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கும் இந்த பிரசாரம் மே 5-ம் தேதி வரை நடக்கும்.
இது குறித்து பேசியுள்ள மோடி, `இந்த நாட்டின் ஒடுக்கப்பட்டவர்களுக்காக தங்கள் வாழ்க்கை முழுவதும் போராடிய அம்பேத்கர், பூலே மற்றும் காந்தி ஆகியோரின் கனவுகளை நிறைவேற்ற இந்த அரசு பாடுபடும். இதற்காகவே `கிராம சுவராஜ்’ பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது’ என்று பேசியுள்ளார்.