நாடு முழுவதும் வரும் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தடுப்பூசி விநியோகம் குறித்து இறுதி திட்டம் தயாரிக்கப்படும்.இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வரும் 16ம் தேதி முதல் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அவசர தேவைக்கு இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதற்கான இறுதி அனுமதியை மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை அளித்துள்ளது.
முன்னதாக இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 2 முறை தடுப்பூசிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டது. மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார மையங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக டாக்டர்கள், நர்சுகள் உள்படச் சுகாதாரத் துறையினர், போலீசார் மற்றும் பாதுகாப்புப் படையினர் உள்பட 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தடுப்பூசியை விநியோகிப்பதற்கான முக்கிய மையமாக பூனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தான் நாடு முழுவதும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகளை இருப்பு வைப்பதற்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசியை விநியோகிப்பதற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் மாநிலங்களில் தடுப்பூசிகளை இருப்பு வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், அவற்றை எவ்வாறு விநியோகிப்பது என்பது குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைப்பார்.