ஜனவரி 16 முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்றும், முதல் கட்டமாக 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடும் செலவை மத்திய அரசே ஏற்கும் என்றும் இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பாரத் பயோடெக் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் 16ம் தேதி முதல் போடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் அவசர தேவைக்காக இதைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை வழங்கியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் இரண்டு முறை தடுப்பூசிக்கான ஒத்திகையும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தடுப்பூசிகளை இருப்பு வைப்பதற்காக வசதிகளை ஏற்படுத்தும் படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்படி அனைத்து மாநிலங்களும் தடுப்பூசிகளை இருப்பு வைப்பதற்கான குளிர்சாதன வசதி உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
இந்நிலையில் தடுப்பூசி வினியோகம் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று இறுதிக்கட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் முதல்வர்களுக்கு விளக்கினார். கூட்டத்தில் பிரதமர் மோடி கூறுகையில், நம் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16ம் தேதி முதல் தொடங்கும். இது நம் நாட்டுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் ஆகும். நமக்குப் பெருமைப்படக் கூடிய விஷயமாகும். இரண்டு தடுப்பூசிகளுக்கு முறைப்படி அனுமதி கிடைத்துள்ளது.
இந்த இரண்டும் உலகத்திலேயே மிகவும் மலிவானவை ஆகும். மேலும் 4க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஆய்வுக் கட்டத்தில் உள்ளது. இந்த தடுப்பூசி வினியோகம் இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஒரு முன் மாதிரியாகும். முதல் கட்டமாக மூன்று கோடி பேருக்குப் போடப்படும். தடுப்பூசிக்கான முதல் கட்ட செலவை மத்திய அரசே ஏற்கும். இவ்வாறு அவர் கூறினார்.