கோவிலை எதற்காக பயன்படுத்தினர் என்பது அதிர வைத்துள்ளது - பினராயி விஜயன் வேதனை

கோவிலை இத்தகைய நபர்கள் எதற்காக பயன்படுத்தியுள்ளனர் என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது என்று ஆசிஃபா பாலியல் பலாத்காரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.

Apr 13, 2018, 20:12 PM IST

கோவிலை இத்தகைய நபர்கள் எதற்காக பயன்படுத்தியுள்ளனர் என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது என்று ஆசிஃபா பாலியல் பலாத்காரம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.

எட்டு வயது ஆசிஃபா பானு ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் ஜனவரி 10, 2018 அன்று காணாமல் போனாள், அவளது இல்லத்தில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் அசிபாவின் உடல் ஜனவரி 17,2018 அன்று கிடைத்தது.


அசிபாவை கடத்தியவர்கள் அவளை கொலை செய்வதற்கு முன்பாக பலாத்காரம் செய்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவளது தோள்பட்டை எலும்பு, நெஞ்செலும்புகள், கைகள், இடுப்பு எலும்புகள் யாவும் நொறுங்கிய நிலையில் இருந்தது. அசிபாவை பல நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்து அவள் மீது மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்கள்.

இந்த மொத்த செயலையும் செய்தவர்கள் காஷ்மீரில் வசிக்கும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் அதில் காவல் அதிகாரி ஒருவரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுமி ஆசிபா படுகொலை தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், ”ஆசிஃபா பானு என்ற 8 வயதுச் சிறுமியை பிய்த்து எறிந்த சம்பவம் இந்தியாவை முதிர்ச்சியும் மனிதாபிமானமும் இல்லாத யுகத்திற்கு கொண்டு செல்லும் அரசியல் வெளிப்பாடாகும். எந்தவொரு மனிதனையும் ஆத்திரம் கொள்ளவும், கண்ணீர் சொரியவும் வைக்கும் அனுபவத்தை இந்த கொடிய சம்பவம் அளித்துள்ளது.

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொன்றது மட்டுமல்ல, அதைச் செய்வதற்கான காரணமும் முக்கியமானது. மதத்தின் பெயரால் ஒரு பிஞ்சுக் குழந்தையை இவ்வாறு செய்திருப்பது சங்பரிவார் செயல்பாடுகளின் கொடூரத்தை நாட்டு மக்கள் முன்பு திறந்து காட்டுவதாக உள்ளது. கோவிலை இத்தகைய நபர்கள் எதற்காக பயன்படுத்தியுள்ளனர் என்பது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

இத்தகைய கபடத்தனமான மத ஈடுபாடும், கபடத்தனமான தேசிய ஈடுபாடுமே சங்பரிவாரை வழிநடத்துகிறது. ஒவ்வொரு தந்தைக்கும், தாய்க்கும் ஆசிபா தங்களது சொந்த மகளாக. அனைத்து இளைஞர்களுக்கும் அவர்களது சொந்த சகோதரியாக தோன்ற வேண்டிய நேரமிது.

புன்சிரிக்கும் அந்த முகத்தை மனதில் நிறுத்தி ஆசிஃபாவுக்காக நாடு ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அவர்களை பாதுகாப்பவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading கோவிலை எதற்காக பயன்படுத்தினர் என்பது அதிர வைத்துள்ளது - பினராயி விஜயன் வேதனை Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை