ஆந்திராவில் சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பியதாக தெலுங்குதேசம், பாஜக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. விஜயநகரத்தில் 400 ஆண்டு பழமைவாய்ந்த ராமர்தீர்த்தம் கோயிலில் இருந்த ராமர் சிலை உடைக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்பாக, விஜயவாடாவில் நேரு பஸ் நிலையம் அருகே சீதா தேவி சிலை உடைந்து காணப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் தீ வைக்கப்பட்டு எரிந்தது. இந்த சம்பவங்களைக் கண்டித்து பாஜக, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஆந்திர போலீஸ் டிஜிபி கவுதம் சவாங் கூறியதாவது:கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களிலும், பொய் தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி மதநல்லிணக்கத்தை சீர்குலைத்த சம்பவங்களிலும் தெலுங்குதேசம், பாஜக கட்சியினருக்குத் தொடர்பு உள்ளது.
இது வரை 180 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் வதந்தி பரப்பிய தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 13 பேர், பாஜகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் 9 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது. கோயில் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசியல் கட்சிகள் அடைக்கலம் தரக் கூடாது. இவ்வாறு டிஜிபி கூறினார்.இதற்கிடையே, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால்தான், அவரது ஆட்சியில் இந்த சம்பவங்கள் நடக்கின்றன என்று பாஜகவும், ஜனசேனாவும் குற்றம்சாட்டி வந்தன.
இதனால், முதல்வர் ஜெகன்மோகன் தற்போது இந்துக்களுக்கு தான் எதிரி அல்ல என்று கூறி வருகிறார். மேலும், அவர் மாட்டுப் பொங்கலன்று கோமாதா பூஜையில் பங்கேற்றார். குண்டூர் மாவட்டத்தில் நசரத்பேட்டையில் 108 மாடுகளை கொண்டு நடத்தப்பட்ட கோமாதா பூஜையில் ஜெகன்மோகன் பயபக்தியுடன் பங்கேற்றார். தமிழகத்தில் திமுகவை இந்து விரோத கட்சி என்று சித்தரிக்க பாஜக முயற்சிப்பது போல், அங்கும் ஜெகனை அப்படி சித்தரிக்கும் மதவாத அரசியலில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது.