வெறும் 36 ரன்களில் ஆல் அவுட் ஆன இந்திய கிரிக்கெட் அணியால் பின்னர் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாதனை படைக்க முடியும் என்றால் 44 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரசால் சாதனை படைக்க முடியாதா என்ன? என்று கேட்கிறார் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தலைவர் சஞ்சய் ஜா. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணிக்கு கிடைத்த சரித்திர வெற்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்திய அணியை புகழாத சர்வதேச கிரிக்கெட் வீரர்களே இல்லை என்று கூறலாம். இந்தப் போட்டி தொடங்குவதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் வாகன், ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா படுதோல்வி அடையும் என்று கூறியிருந்தார். முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 36 ரன்களில் ஆல்-அவுட் ஆகி அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததும், தான் கூறியது உண்மையாகி வருகிறது என்ற வாகன், தன்னுடைய கூற்று சரியானது என தெரிவித்தார்.
ஆனால் அதன் பின்னர் இந்தியா ஃபீனிக்ஸ் பறவையைப் போல 2வது டெஸ்டில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து பழிதீர்த்தது. அதுமட்டுமில்லாமல் 3வது டெஸ்டில் தோல்வியின் பிடியிலிருந்து டிரா செய்தும், பிரிஸ்பேனில் நடந்த 4வது டெஸ்டில் அபார வெற்றி பெற்று டெஸ்ட் தொடரையும் இந்தியா கைப்பற்றியது. இந்திய அணியின் இந்த அபார வெற்றிக்கு பின்னர் வாகன் கூறுகையில், இந்திய வீரர்களை குறைவாக மதிப்பிட்டதற்கு நான் மன்னிப்பு கோருகிறேன். இந்தியாவின் வெற்றி என்னுடைய முகத்தில் அழுகிய முட்டையை வீசியது போல நான் உணர்கிறேன் என்றார். இந்நிலையில் இந்தியாவின் இந்த வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஊக்கமாக அமையும் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கூறியுள்ளார்.
அவர் தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பது: முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி 36 ரன்களில் ஆல்அவுட் ஆனது. ஆனால் அதன் பின்னர் அபாரமாக ஆடி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் அணியின் இந்த வியத்தகு செயல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ஊக்கமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இது இந்தியாவின் 36 ஐ விட அதிகமாகும். கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இந்திய அணியைப் போல அடுத்த தேர்தலை சந்தித்து காங்கிரஸ் சாதனை படைக்க வேண்டும். இவ்வாறு சஞ்சய் ஜா தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். சஞ்சய் ஜா காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கட்சியின் தலைமையை வெளிப்படையாக விமர்சித்ததால் கடந்த வருடம் காங்கிரஸ் கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டார்.