பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இந்தோனேசிய போலீசார் ஒரு நூதன தண்டனை கொடுத்தனர். கையில் பணம் இல்லாதவர்கள் 50 முறை புஷ் அப் எடுக்க வேண்டும் என்று போலீசார் கூறினர். இதையடுத்து முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் வேறு வழியில்லாமல் அந்த தண்டனையை ஏற்றுக் கொண்டனர்.உலகம் முழுவதும் கொரோனா என்ற பயங்கர நோய் பரவிக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் அந்த பீதி மக்களிடம் இருந்து அகலவில்லை.
குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து உள்பட நாடுகளில் இந்நோய்க்குப் பலியாகுபவர்கள் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இதற்கிடையே இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேறு பயமுறுத்தி வருகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் இரண்டாவது முறையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம், வழக்கு எனப் பல கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் எல்லா நாட்டிலும் இருக்கத் தான் செய்கின்றனர்.
இந்நிலையில் இந்தோனேசிய நாட்டில் விதிமுறைகளை மீறி முகக் கவசம் அணியாமல் பொது இடத்தில் சென்றவர்களுக்கு அந்நாட்டு போலீசார் ஒரு நூதன தண்டனை கொடுத்தனர். இங்கும் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் செல்வர்களுக்கு அபராதம் வழக்கு என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இங்கு உள்ள பாலி நகரில் சம்பவத்தன்று பொது இடத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற 100க்கும் மேற்பட்டோரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இவர்களில் 70 பேரிடம் இருந்து தலா 7 டாலர் அபராதமாக வசூலிக்கப்பட்டது. சிலர் தங்களிடம் பணம் இல்லை என்று கூறினர். இதையடுத்து அவர்களை அந்த இடத்திலேயே புஷ்-அப் எடுத்து விட்டு செல்லுமாறு போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் நல்ல பிள்ளையாக ஒழுங்காக புஷ் அப் எடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்தோனேசிய போலீசாரின் இந்த நூதன தண்டனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.