டெல்லியில் ஜன.26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஊடுருவி, 4 பேரை சுட்டுக் கொல்லத் திட்டமிட்ட மர்மநபரை விவசாயிகள் பிடித்துள்ளனர்.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.23) 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், சட்டங்கள் குறித்து பரிசீலிக்க 4 நிபுணர்கள் அடங்கிய குழுவையும் சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதில் ஒருவர் தாமாக விலகி விட்டார். குழுவில் உள்ள 4 பேருமே அரசுக்கு ஆதரவாகவும், சட்டங்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு தருணங்களில் பேசியவர்கள் என்று கூறி, குழுவை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர். இதற்கிடையே விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் 40 பேருடன் மத்திய அரசு இது வரை 10 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை.
கடைசியாக நேற்று(ஜன.22) 11 வது முறையாக விக்யான் பவனில் மத்திய அமைச்சர்கள் பியூஸ்கோயல், தோமர் தலைமையில் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டுமென்பதில் போராட்டம் நடத்தும் 41 விவசாயிச் சங்கங்களும் உறுதியாக உள்ளன. ஆனால், மத்திய அரசு அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது.இந்நிலையில், விவசாயச் சங்கங்களின் 3 தலைவர்களுக்குக் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. தொலைப்பேசியிலும், சமூக ஊடகங்களிலும் மிரட்டல் வந்துள்ளதாக விவசாயச் சங்கத்தினர் தெரிவித்தனர். ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா நடைபெறும் போது, இன்னொரு புறத்தில் மிகப் பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். பேரணியை சீர்குலைக்காமல் அமைதியாக நடத்த ஒத்துழைப்பது போலீசாரின் பொறுப்பு என்று பாரதிய கிஷான் யூனியன் தலைவர் பல்பீர்சிங் ராஜேவால் கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, டெல்லியின் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் நேற்று(ஜன.22) இரவு பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது முகமூடி அணிவிக்கப்பட்ட ஒருவரை, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை சிலர் ஏவி விட்டுள்ளதாகவும், டிராக்டர் பேரணியில் விவசாயச் சங்கத் தலைவர்கள் 4 பேரைச் சுட்டுக் கொல்லத் திட்டம் போடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.அந்த முகமூடி அணிந்த நபர் கூறுகையில், நாங்கள் 2 குழுவாக உள்ளோம். எங்களை பேரணியில் விவசாயிகள் போலவும், போலீசாரைப் போலவும் உடையணிந்து கலந்து கொள்ளச் சொன்னார்கள். பேரணியில் 4 விவசாயிச் சங்கத் தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு அவர்களின் புகைப்படங்களை எனக்கு அளித்துள்ளனர் என்றார்.
பாரதிய கிஷான் யூனியனைச் சேர்ந்த ஜகஜித்சிங் தாலேவால் கூறுகையில், இந்த மர்ம நபர் போராட்டக்காரர்களில் ஒருவராக ஊடுருவியிருந்தார். திடீரென ஒரு பெண்ணிடம் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் வம்பு செய்ததாகப் பொய்யாகக் குற்றம்சாட்டிப் பரபரப்பு ஏற்படுத்தினார். அதன் பிறகு இவரை துருவித் துருவி விசாரித்த போது, விவசாயிகளிடம் ஆயுதம் எதுவும் இருக்கிறதா என்று பார்க்க வந்தேன் என்றார். அதன்பிறகு டிராக்டர் பேரணியில் அசம்பாவிதம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இவர் கடந்த 19ம் தேதி முதல் போராட்டத்தில் ஊடுருவியிருக்கிறார் என்று தெரிவித்தார்.