மருத்துவமனையில் உடல்நலம் குன்றிய மகனை காண்பிப்பதற்காக வந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வியாபாரியை பொதுமக்கள் விரட்டிச் சென்று அடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கேரள மாநிலம் காசர்கோட்டில் நடந்துள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள செம்மநாடு பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (48). இவர் செருப்பு மொத்த வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் தன்னுடைய உடல்நலம் குன்றிய 6 வயது மகனுக்கு மருத்துவ பரிசோதனை நடத்துவதற்காக வந்திருந்தார். இந்த சமயத்தில் முகமது ரபீக், அந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஆபாசமாக போஸ் கொடுத்ததாகவும் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், ரபீக்கை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் அதன் பிறகும் அவரது சில்மிஷங்கள் தொடர்ந்தது. இதை தொடர்ந்து அந்த இளம்பெண், ரபீக்கை தாக்க முயற்சித்தார். இதை எதிர்பாராத ரபீக் மருத்துவமனையில் இருந்து வெளியே ஓடினார். அந்த இளம் பெண்ணும் விடாமல் அவரை துரத்தினார். இதைப் பார்த்த மருத்துவமனையின் வெளியே நின்றிருந்த சிலர், என்னை விவரம் என்று அந்த இளம்பெண்ணிடம் கேட்டனர். அப்போது நடந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் கூறினார். இதையடுத்து அப்பகுதியினர் ரபீக்கை விரட்டிச் சென்று பிடித்தனர். தொடர்ந்து சிலர் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து அவரை தாக்கியவர்களே ரபீக்கை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் சிறிது நேரத்திலேயே ரபீக் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காசர்கோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரபீக் பொதுமக்கள் தாக்குதலில் இறந்தாரா, அல்லது ஓடும் போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா என்பது குறித்து தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகே மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரிலும், தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.