மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும்படி மகனுக்கு சொல்லி புரிய வையுங்கள் என்று கூறி பஞ்சாபை சேர்ந்த ஒரு விவசாயி பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்தங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் போராட்டத்தின் தீவிரம் அதிகரித்ததை தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதுவரை 11 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த பலனும் ஏற்படவில்லை. புதிய சட்டத்தை கண்டிப்பாக வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினரும், வாபஸ் பெற மாட்டோம் என்று மத்திய அரசும் பிடிவாதமாக இருந்ததால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த 10வது கட்ட பேச்சுவார்த்தையின் போது புதிய சட்டங்களை 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் அதை ஏற்கவில்லை. இதனால் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். இதில் 2 லட்சம் டிராக்டர்கள் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பிரோசாபூர் பகுதியை சேர்ந்த ஹர்பிரீத் சிங் என்ற விவசாயி பிரதமர் மோடியின் தாய் ஹீரா பென்னுக்கு, புதிய சட்டத்தை வாபஸ் பெற மகனிடம் அறிவுறுத்துமாறு கூறி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பது: போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளுக்காக நான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். தங்களது மகனுக்கு புரியவைத்து இந்த புதிய சட்டத்தை வாபஸ் பெறுமாறு கூறவேண்டும். யாரும் தன்னுடைய தாய் சொல்லை தட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். மிகவும் துக்கத்துடன் தான் இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். உங்களுக்கு தெரிவதைப் போல 3 கறுப்பு சட்டங்கள் காரணமாக நாட்டுக்கு உணவு ஊட்டும் விவசாயிகள் கடந்த பல நாட்களாக டெல்லியில் சாலைகளில் தான் தூங்குகின்றனர். அவர்களில் வயதானவர்களும், குழந்தைகளும் உள்ளனர். குளிர்காலம் என்பதால் பலர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர். அவர்களது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே உங்களது மகனுக்கு புரியவைத்து சட்டத்தை வாபஸ் பெற கூற வேண்டும். இவ்வாறு ஹர்பிரீத் சிங் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.