சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி 30 லட்சம் டோஸ் அனுப்ப முடிவு

by Nishanth, Jan 26, 2021, 12:12 PM IST

மியான்மர், பூடான் உள்பட நம் அண்டை நாடுகள் மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் 10 நாட்களுக்குள் சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்தார்.இந்தியாவில் பாரத் பயோடெக் மற்றும் சிரம் இன்ஸ்டியூட் தயாரித்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தடுப்பு மருந்துக்குப் பக்க விளைவுகள் அதிகமாக இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மியான்மர், பூடான், சிஷெல்ஸ், நேபாளம் உள்பட அண்டை நாடுகளுக்கும் இந்த மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இது தவிர பிரேசில் நாட்டுக்கு கடந்த வாரம் 20லட்சம் டோஸ் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகள் தடுப்பூசி கேட்டு இந்தியாவிடம் விண்ணப்பித்துள்ளன.

இந்நிலையில் சவுதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவும் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து சவுதி அரேபியாவுக்கு 30 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அடர் பூனவல்லா கூறியது: 5.25 அமெரிக்க டாலர் விலையில் 30 லட்சம் டோஸ் தடுப்பூசி சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 7 முதல் 10 நாட்களுக்குள் இந்த தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படும். சவுதி அரேபியாவுக்கு மட்டுமில்லாமல் தென் ஆப்பிரிக்காவுக்கும் தடுப்பு மருந்து அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நாட்டுக்கு 5.25 அமெரிக்க டாலர் விலையில் 1.5 மில்லியன் டோஸ்கள் அனுப்பி வைக்கப்படும். ஆனால் ஐரோப்பாவுக்கு தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட மாட்டாது. ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பினால் இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவுக்கான தடுப்பூசி வினியோகத்தை கடுமையாக பாதிக்கும். தற்போது தினமும் 2.4 மில்லியன் டோஸ்கள் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. மார்ச் இறுதிக்குள் இது 30 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்காவுக்கும் இந்தியாவின் கொரோனா தடுப்பூசி 30 லட்சம் டோஸ் அனுப்ப முடிவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை