நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை தற்போது திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலிக்கு இம்மாத தொடக்கத்தில் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த போது ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது. 5 நாள் மருத்துவமனையில் இருந்த பின்னர் ஜனவரி 7ம் தேதி அவர் வீடு திரும்பினார். இதன் பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் கங்குலிக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து நேற்று அவருக்கு ஈசிஜி பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சில குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று அவர் மீண்டும் கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
முதற்கட்ட பரிசோதனையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும், தற்போது கங்குலியின் உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டி வரும் என்று ஏற்கனவே டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். மருத்துவமனையில் கங்குலியுடன் அவரது மனைவி டோணா மற்றும் சகோதரர் சினேகசிஷ் கங்குலி ஆகியோர் உள்ளனர். கங்குலியின் உடல்நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.