அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் சீனா கிராமம் அமைத்துள்ளதை தொடர்ந்து மத்திய அரசைக் கண்டித்து கண்டித்து அருணாசலப் பிரதேசம் முழுவதும் மாணவர் அமைப்பினர் திடீர் போராட்டம் நடத்தினர். இந்திய எல்லையில் சமீபகாலமாக சீனா அடிக்கடி தொல்லை கொடுத்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் இரண்டு முறை இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீன எல்லையை ஒட்டியுள்ள அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீனா ரகசியமாக ஒரு கிராமத்தை அமைத்துள்ளதாக தகவல் வெளியானது.
இங்குள்ள அப்பர் சுபான்சிரி என்ற கிராமத்தில் உள்ள சாரிசு நதிக்கரையில் சீனா வீடுகள் கட்டி உள்ள செயற்கைக்கோள் படத்தை ஒரு தேசிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த வருடம் நவம்பர் 1ம் தேதி இந்த செயற்கைகோள் போட்டோ எடுக்கப்பட்டது. இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் உடனடியாக ஆய்வு நடத்தினர். அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லையில் இருந்து 4.5 கிலோ மீட்டர் உள்ளே இந்த கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 26ம் தேதி இதே பகுதியில் ஒரு செயற்கைக்கோள் போட்டோ எடுக்கப்பட்டது. ஆனால் அந்த போட்டோவில் எந்த கட்டிடங்களும் இல்லை.
ஆனால் தற்போது வெளியாகி உள்ள போட்டோவில் ஏராளமான கட்டிடங்கள் இருப்பது தெளிவாக தெரிகிறது. இந்திய எல்லையில் ஊடுறுவதற்காகவும், கண்காணிப்பதற்காகவுமே சீனா இந்த கட்டிடங்களை கட்டி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் சீனா அங்கு ஆயுதங்களை மறைத்து வைக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய எல்லையில் சீனா புதிய கிராமம் கட்டியுள்ளதற்கு அருணாச்சலப் பிரதேசம் மாணவர் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அருணாச்சல பிரதேச மாணவர் அமைப்பு தலைவர் ஹவா பகாங் கேட்டுக் கொண்டுள்ளார்.