கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப்.1) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
அடுத்த 6 ஆண்டுகளில் ஆரம்ப, நடுத்தர சுகாதாரத் திட்டங்களில் ரூ.64,180 கோடி முதலீடு செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பூசிக்கு ரூ.35 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும். தேவைப்பட்டால் இன்னும் கூடுதலாக ஒதுக்கப்படும். தற்போது 5 மாநிலங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விரைவில் நாடு முழுவதும் போடப்படும். இந்தியாவில் விரைவில் மேலும் 2 தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் நாடு முழுவதும் 11 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் ஒரு கோடியே 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 3,500 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
சென்னை, கொச்சின், பாரதீப் உள்பட 5 மீன்பிடி துறைமுகங்கள், மெகா மீன்பிடி துறைமுகங்களாக மேம்படுத்தப்படும்.
தேசிய கல்விக் கொள்கையின் கீழ் 15 ஆயிரம் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.
2021-22ம் ஆண்டில் வேளாண் கடன்களுக்கான நிதி ஒதுக்கீடு 16 லட்சத்து 50 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு 2020-21ம் ஆண்டில் நெல் கொள்முதலுக்காக விவசாயிகளுக்கு ஒரு லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. 43.36 லட்சம் கோதுமை விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் கோடி கொள்முதல் நிலுவைத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு துறையில் அன்னிய நேரடி முதலீடு தற்போது உள்ள 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக அதிகரிக்க அனுமதிக்கப்படும்.
அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 100 நகரங்களில் எரிவாயு குழாய் இணைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். ரூ.2 ஆயிரம் கோடியில் தனியார் ஒருங்கிணைப்புடன் 7 துறைமுகத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செயயப்படும். அதில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் மூலதனச் செலவுகளுக்கு ஒதுக்கப்படும்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மாநிலங்களில் புதிதாக தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேற்கு வங்கத்தில் ரூ.25 ஆயிரம் கோடியில் 675 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
மேற்கு வங்கம், அசாம் மாநிலத்தில் தேயிலைத் தொழிலாளர்களின் நலத் திட்டங்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மாநிலங்களில் ஏப்ரல்-மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த மாநிலங்களில் பாஜக வெற்றிக்காக முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.