வருமான விகிதங்களில் எந்த சலுகையும் இல்லை.. நடுத்தர மக்கள் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் அம்சங்கள்..

by எஸ். எம். கணபதி, Feb 1, 2021, 13:39 PM IST

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் வரி உச்சவரம்பு சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(பிப்.1) காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில், தமிழகத்தில் ஒரு கோடியே 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 3,500 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சென்னை உள்பட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் பல்வகை கடல்பாசி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்பது உள்பட சில திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள மேற்குவங்கம், அசாம் மாநிலங்களுக்கும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், வருமான வரி விகிதங்களில் கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று நடுத்தர மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

75 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் ஓய்வூதியம், மாத ஊதியம் மட்டுமே வருமானமாகக் கொண்டிருந்தால் வருமானக் கணக்கு(ஐ.டி.ரிட்டர்ன்ஸ்) தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.15,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து துறை தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், பருத்திக்கு சுங்க வரி 10 சதவீதமாகவும், சில்க் வகைகளுக்கு 15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் சிலவற்றுக்கும் சுங்க வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

You'r reading வருமான விகிதங்களில் எந்த சலுகையும் இல்லை.. நடுத்தர மக்கள் ஏமாற்றம்.. மத்திய பட்ஜெட் அம்சங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை