மகாராஷ்டிராவில் போலியோ சொட்டு மருந்துக்குப் பதிலாகக் கிருமிநாசினி(சானிடைசர்) கொடுக்கப்பட்டதால், 12 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் நேற்று(பிப்.1) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் யவத்மால் என்ற மாவட்டத்தில் ஒரு மருத்துவமனையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. அப்போது மருந்து கொடுத்த செவிலியர் ஒருவர் தவறுதலாகச் சொட்டு மருந்து பாட்டிலுக்குப் பதிலாகக் கிருமிநாசினி பாட்டிலை எடுத்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டார். குழந்தைகள் மயங்கி விழவே அங்குள்ளவர்கள் சுதாரித்துக் கொண்டு பார்த்தனர். அப்போது தான் குழந்தைகளுக்குத் தவறுதலாகக் கிருமிநாசினி ஊற்றப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, உடல்நலம் பாதித்த 12 குழந்தைகள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட தலைமை அதிகாரி ஸ்ரீகிருஷ்ண பஞ்சால் கூறுகையில், சம்பவம் தொடர்பாக டாக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு நன்றாக உள்ளனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றார்.