பிரதமர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு.. விமான நிலையத்தில் மோடியின் சகோதரர் திடீர் உண்ணாவிரதம்..

by எஸ். எம். கணபதி, Feb 4, 2021, 09:50 AM IST

தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். அப்போது அவரை வரவேற்க வந்திருந்தவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றது அவருக்கு தெரிய வந்தது. உடனே அவர் விமான நிலையத்திலேயே ஒரு நாற்காலியைப் போட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்தினர்.

ஆனால், அவர் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறினார்.மேலும், பிரகலாத் மோடி கூறுகையில், என்னை வரவேற்க எனது ஆதரவாளர்கள் 100 பேர் வந்திருந்தனர். அவர்களை போலீசார் காரணமின்றி கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் சிறையில் உள்ள போது நான் இந்த இடத்தை விட்டுச் செல்ல முடியாது. பாதுகாப்பு அதிகாரிகளிடம் கேட்டால், பிரதமர் அலுவலக உத்தரவின்படியே அவர்களை போலீசார் கைது செய்ததாகக் கூறினார்கள். அப்படியானால், அந்த உத்தரவைக் காட்டுங்கள் என்று கேட்டால் பதில் இல்லை. வேண்டுமென்றே பிரதமர் அலுவலகத்தின் பெயரைக் கெடுக்கிறார்கள். நான் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் தொடங்கியிருக்கிறேன். கைதானவர்களை விடுவித்தால்தான் வெளியேறுவேன் என்றார்.

இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் உயர் அதிகாரிகளிடம் பேசினர். பின்னர், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து பிரகலாத் மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். விமான நிலைய கூடுதல் பொது மேலாளர் பூபேந்திரசிங் கூறுகையில், பிரகலாத்தின் ஆதரவாளர்கள், 144 தடையுத்தரவு உள்ள உயர்பாதுகாப்பு பகுதிக்குள் சென்றதால் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவித்தார்.கடந்த 2014ம் ஆண்டில் பிரதமராக மோடி பொறுப்பேற்ற போது அவரது குடும்பத்தினரைப் பற்றிய செய்திகளே வெளியே வராது. ஆனால், சமீப காலமாக அவரது சகோதரர்கள் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன.

You'r reading பிரதமர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு.. விமான நிலையத்தில் மோடியின் சகோதரர் திடீர் உண்ணாவிரதம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை