டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக அமெரிக்க விளையாட்டு வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர் ரூ. 7.28 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் 73 நாட்களுக்கும் மேலாக காசிப்பூர், சிங்கு, டிக்ரி ஆகிய இடங்களில் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை கைவிட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, உலகளவில் பிரபலங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் மருத்துவச் செலவுக்காக அமெரிக்க கால்பந்து லீக் வீரர் ஜூஜூ ஸ்மித் சூஸ்டர் ரூ.7.28 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஜூஜூ ஸ்மித் சூஸ்டர், உயிர்களைக் காப்பதற்காக, இந்தியாவில் உள்ள விவசாயிகளின் மருத்துச் செலவுக்கு ரூ. 7.28 லட்சம் (10,000 டாலர்) நிதியுதவி வழங்கி உள்ளேன். இதன்மூலம் எந்தவொரு உயிர் இழப்பையும் நாம் தடுக்க முடியும் என எண்ணுகிறேன் என்று கூறி விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.