`1967 ரகசியத்தால் பனிப்பாறை விபத்து நடத்தா?.. உத்தரகாண்ட் சம்பவத்தில் அமெரிக்க பரபரப்பு!

by Sasitharan, Feb 10, 2021, 19:49 PM IST

உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறைகள் உருகி தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுமானத்தில் இருந்த இரண்டு நீர்மின் நிலையங்கள் இதில் மூழ்கின. பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. 200-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், பனிப்பாறைகள் திடீரென எப்படி உருகின என்பதற்கு இதுவரை காரணம் யாருக்கும் தெரியவில்லை. இதனால், பனிப்பாறைகள் எப்படி உருகின என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், அப்பகுதி மக்கள், சீனாவை உளவு பார்ப்பதற்காக இமயமலையில் அமெரிக்கா கொண்டுவந்து வைத்த அணுசக்திக் கருவியே இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். இது என்னப்பா புது கதையாக இருக்கு, அமெரிக்க அணுசக்திக் கருவி இந்தியாவிற்கு எப்படி வந்தது, எதற்காக வந்தது என்ற வரலாற்றை சற்று பார்ப்போம் வாருங்கள்.

கடந்த 1964ம் ஆண்டு சீனா திடீரென்று அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதனால், கவலையடைந்த அமெரிக்கா, இந்தியா உதவியை நாடியது. எதற்கு என்றால், சீனாவின் அணுகுண்டு சோதனைகளை உளவு பார்க்க அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதாவது, இமயமலையில் இருக்கும் நந்தாதேவி சிகரம் இந்தியாவின் இரண்டாவது உயரமான சிகரமாகும், எனவே, இந்த சிகரத்தில் உளவுக்கருவியைப் பொருத்தினால் சீனாவைக் கண்காணிக்க முடியும் என்று கருதியது. இதனை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

இதனை ரகசியமாக செய்ய வேண்டும் என்பதால், சி.ஐ.ஏ உளவு நிறுவனத்துடன், இந்திய உளவு நிறுவனமான இன்டலிஜென்ஸ் பீரோவும் இணைந்து பணியை தொடங்கியது. அதன்படி, இன்டலிஜென்ஸ் பீரோ குழு ஒன்று அமெரிக்காவுக்குப் பயிற்சி சென்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருக்கும் மெக்கின்லி பனிச்சிகரத்தில் பயிற்சி எடுத்து கொண்டனர். தொடர்ந்து, 1965ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த உளவுக்கருவியை இமயமலையில் பொருத்தும் ரகசியப் பயணம் தொடங்கியது.

இந்த ரகசிய வேலை செய்ய மின்சக்தி தேவை. ஆனால், இமயமலையில், மின்சாரம் இல்லாத காரணத்தினால், அணுசக்திப் பொருட்களைப் பயன்படுத்த முடிவு செய்தனர். உளவுக்கருவிகள், ஆன்டெனாக்கள், அவற்றை இயங்க வைப்பதற்காக அணுமின் சக்தி ஜெனரேட்டர்கள், புளுட்டோனியம் கேப்ஸ்யூல்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு சி.ஐ.ஏ மற்றும் இன்டலிஜென்ஸ் பீரோ அதிகாரிகள் ரகசியப் பயணம் சென்றனர். ஆனால், நந்தாதேவி சிகரத்தின் அடிவாரத்தை அவர்கள் அடைந்தபோது, திடீரென பனிப்புயல் தாக்கியது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என்று அந்தக் கருவிகளை அப்படியே போட்டுவிட்டு திரும்பி வந்துள்ளனர்.

இதனையடுத்து, 7 மாதங்களுக்கு பின் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்தக் கருவிகளையும் அணுசக்திப் பொருட்களையும் காணவில்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு தோல்வியுடன் திரும்பி வந்தனர். தொடர்ந்து, 1967ம் ஆண்டு மீண்டும் சென்று பார்த்தபோதும் அவை கிடைக்கவில்லை. ரகசியத் திட்டம் என்பதால் வெளியிலும் சொல்ல முடியவில்லை. அத்துடன் தேடல் கைவிடப்பட்டது. 100 ஆண்டுகள் வரை வீரியத்துடன் இருக்கும் அணுசக்திப் பொருட்கள் அவை. கதிர்வீச்சையும் வெளிப்படுத்தும், சூடாகவும் இருக்கும். எனவே, பனிப்பாறைகளை உருக்கி உள்ளே சென்று தரையில் புதைந்து போயிருக்கும் என அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.

இருப்பினும், இந்த திட்டம், கடந்த 2018-ம் ஆண்டு வெளியில் தெரியவந்தது. உத்தரகாண்ட் அமைச்சரான சத்பால் மகராஜ் என்பவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இந்த விஷயம் குறித்துப் பேசினார். இந்த அணுசக்திப் பொருட்களால் கங்கை நீர் மாசுபடுகிறது. கங்கை நதியே அபாயத்தில் இருக்கிறது. இவற்றைக் கண்டுபிடித்து அகற்ற வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

இது குறித்து இந்திய உளவுத்துறைக் குழுவுக்குத் தலைமையேற்று சென்ற மன்மோகன் சிங் கோலி கூறுகையில், கருவிகளை முறையாகப் பொருத்தவில்லை. அப்படியே போட்டுவிட்டு ஓடிவந்தோம். தனித்தனியாக இருக்கும் அவற்றால் எந்த ஆபத்தும் இல்லை என்கிறார். இருப்பினும், இந்த அணுசக்திப் பொருட்களின் வெப்பம்தான் பனிப்பாறையை உருகி உடையச் செய்தது என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

You'r reading `1967 ரகசியத்தால் பனிப்பாறை விபத்து நடத்தா?.. உத்தரகாண்ட் சம்பவத்தில் அமெரிக்க பரபரப்பு! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை