பிரதமர் மோடி இன்று காலையில் புதுச்சேரிக்குச் சென்று அரசு விழாவில் கலந்து கொள்கிறார். மாலையில் கோவைக்குச் சென்று பாஜக பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.25) காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்குச் செல்கிறார். அங்கு காலை 11.30மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். விழுப்புரம்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத் திட்டத்தில் ரூ.2426 கோடியில் காரைக்கால் மாவட்டத்தின் 56 கி.மீ. தூர சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.491 கோடியில் காரைக்கால் மருத்துவக் கல்லூரி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பின்னர், பிரதமர் மோடி மதியம் 2.10 மணிக்குச் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 3.35 மணிக்கு கோவைக்கு வந்து சேருகிறார். கொடிசியா அரங்கில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார். ரூ.8 ஆயிரம் கோடி செலவில் இதில் 2 மின் உற்பத்தி அலகுகள் தலா 500 மெகாவாட் திறன் கொண்டவையாகும்.
நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் 2,670 ஏக்கர் பகுதியில் அமைக்கப்பட்ட 709 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தையும் மோடி அர்ப்பணித்து வைக்கிறார். கீழ் பவானி திட்டம், பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தில் கட்டப்பட்ட பல்வேறு குடியிருப்புகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.இதன்பின்பு, மாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்துக்குச் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பாஜகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அவர் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார். இதன்பின்பு, கோவை விமானநிலையத்தில் இருந்து தனி விமானத்தில் டெல்லி செல்கிறார்.
பிரதமர் மோடியின் கோவை வருகையையொட்டி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று மதியம் 2.45 மணிக்கு தனி விமானம் மூலம் கோவைக்குச் செல்கின்றனர். அங்கு பிரதமரை வரவேற்று அரசு விழாவில் அவருடன் பங்கேற்கின்றனர்.