நிதிமோசடி செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அவசரச்சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த அவசரச் சட்டத்தின்படி, நிதி மோசடிகள், வங்கியில் கடன் மோசடி செய்து வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லுதல் போன்ற பொருளாதார குற்றங்களைப் புரிவோரின் சொத்துக்களைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முடக்குவதற்கும், பறிமுதல் செய்வதற்கும் அதிகாரம் அளித்தலாகும்.
மேலும் பொருளாதார குற்றங்கள், நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களை இந்தியாவுக்கு வரவழைத்து, விசாரணையை எதிர்கொள்ளவைத்தல். வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்கள் தாங்கள் இழந்த சொத்துக்கள், பணம் ஆகியவற்றை மோசடியாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றை செய்ய முடியும்.
இந்த அவசரச் சட்டத்தின் கீழ் பொருளாதார குற்றங்கள், நிதிமோசடி வழக்குகளை விசாரிக்கத் தனியாக நீதிமன்றங்களைச் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம் 2002-ன் கீழ் உருவாக்குதல். நீதிமன்றத்தில் அதிகமான வழக்குகள் குவிந்துவிடக்கூடாது என்பதால், இந்த அவசரச் சட்டத்தின் கீழ் ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் மோசடி செய்தவர்கள் மீது இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், நிதிமோசடிகள், பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் அதிகாரம் அரசுக்கு அளித்தல், அதுமட்டுமல்லாமல், மோசடியாளர்கள் தனது சொத்துக்கள் என்று உரிமை கொண்டாடுவதை ரத்து செய்தல் போன்றவையும் இந்த அவசரச்சட்டத்தில் இடம்பெற்றுள்ன.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் நாடு திரும்பவும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எதிர்கொள்ளவும் வழிசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அவர்கள் வரும்போது, அவர்களுக்கு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்புகள் வழங்கப்படும், மேலும் அவர்கள் பதில் மனுத்தாக்கல் செய்யவும் அனுமதிக்கப்படும். உள்நாடு அல்லது வெளிநாடுகளில் வசித்தாலோ உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்ய முடியும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.