சண்டைக் கோழியின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி தவறுதலாக வயிற்றில் பாய்ந்து அதன் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த சண்டைக் கோழியை போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.நம்ம ஊரில் கோழிச் சண்டை நடப்பது போல தெலங்கானா மாநிலத்திலும் கோழிச் சண்டை மிகவும் பிரபலம் ஆகும். இந்த மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இந்த கோழிச் சண்டைகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள ஜக்தியால் என்ற மாவட்டத்தில், தான் வளர்த்த சண்டைக் கோழியால் அதன் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள கோண்டாப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தனுகுல சதீஷ் (45). இவர் ஒரு சண்டைக் கோழி வளர்த்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஜக்தியால் மாவட்டம் கோல்லப்பள்ளி லோதனூர் கிராமத்தில் உள்ள எல்லம்மா கோவில் வளாகத்தில் கோழிச் சண்டை நடத்தப்பட்டது. இந்தக் கோழிச் சண்டையில் சதீஷின் கோழியும் கலந்து கொண்டது. சண்டைக்கு முன்பாக சதீஷ் தன்னுடைய கோழியின் காலில் 3 இன்ச் நீளமுள்ள ஒரு கூர்மையான கத்தியைக் கட்டி வைத்திருந்தார்.சண்டை மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது சதீஷின் கோழி எதிராளியின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் தப்பி ஓட முயற்சித்தது. இதைப் பார்த்த சதீஷ் தன்னுடைய கோழியை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார்.
அப்போது தவறுதலாக அந்த கோழியின் காலில் கட்டப்பட்டிருந்த கூர்மையான கத்தி அவரது அடி வயிற்றில் பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சதீஷ் அந்த இடத்திலேயே சாய்ந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோழிச் சண்டையில் கலந்து கொண்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்தக் கோழியை கஸ்டடியில் எடுத்தனர். சம்பவத்திற்கு ஆதாரமாகக் கோழியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் தீர்மானித்துள்ளனர். அந்தக் கோழியை போலீசார் போலீஸ் நிலையத்தில் ஒரு கூண்டு தயாரித்து அதில் அடைத்து வைத்துள்ளனர். அதற்குக் காவலாக ஒரு போலீஸ்காரரும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்.