ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
காஷ்மீர், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் சமீபத்தில் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் இந்தியாவில் குழந்தைகளின் உரிமைக்கான தான்னார்வ அமைப்பான ‘க்ரை’ நிறுவனம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
அந்த ஆய்வின் முடிவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
அதாவது கடந்த 2006–ம் ஆண்டு 18,967 என இருந்த மேற்படி குற்ற செயல்கள், கடந்த 2016–ல் 1,06,958 என உயர்ந்து இருக்கிறது. கடந்த 2016–ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி நாட்டின் ஒட்டுமொத்த குற்றங்களில் மூன்றில் ஒரு பங்கு, குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவானவை ஆகும்.
இதைப்போல குழந்தைகளுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த பாலியல் குற்றங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் பதிவாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.