மம்தா பானர்ஜி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார். பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி, அடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் ஆகியோருக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்து வெற்றி பெற வைத்தவர். ஆனால் சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். தற்போது பிரசாந்த் கிஷோர், கொல்கத்தாவுக்கு அடிக்கடி வந்து திரிணாமுல் மூத்த தலைவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
அவரின் ஆலோசனைப்படியே, மம்தா தேர்தல் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இந்தநிலையில், மம்தாவுடன் கைகோர்த்துள்ள நிலையில், மேற்குவங்கத்தில், பாஜகதான் வெற்றி பெறும் பிரசாந்த் பேசியுள்ள ஆடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Clubhouse என்ற சாட் செயலியில் பத்திரிகையாளர்கள் மத்தியில் பிரசாந்த் பேசிய ஆடியோ தான் அது. ``இந்த முறை திரிணாமுல் நடத்திய சர்வேயில் பாஜகவுக்கு தான் ஆதரவு அலை இருப்பது தெரியவந்துள்ளது. மேற்குவங்கத்தை பொறுத்தவரை மோடி மற்றும் மம்தா இருவரும் சம அளவில் பிரபலமாக உள்ளனர். இங்கு மோடி பிரபலமாக இருக்க காரணம், இந்தியா முழுவதும் மோடியை கடவுளாகப் பார்க்கும் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்கள் உள்ளது தான்.
மேலும், கடந்த 30 ஆண்டுகளில் செய்யாத சிலவற்றை பாஜக செய்யும் என்று மேற்குவங்க மக்கள் நினைக்கிறார்கள். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் மீது மக்களுக்கு கோபம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டு அதிருப்தி காரணமாக இந்த கோபம் வந்துள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரஸின் இஸ்லாமிய ஆதரவு அரசியல், காரணமாக பட்டியலின வாக்குகள் பாஜகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதைவிட முக்கியமானது வங்கத்தில் இந்தி பேசும் மக்கள்தொகை ஒரு கோடி பேர். இவர்கள் மோடிக்கு ஆதரவு அளிப்பர். மதுவாஸ் சிறுபான்மையினர் 75% பேர் ஆதரவும் பாஜகவுக்கு கிடைக்கலாம்" என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதை பாஜக பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.
இதற்கு பதில் கொடுத்துள்ள, பிரசாந்த் கிஷோர் ``எனது பேச்சை பாஜக தலைவர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி. அதே தீவிரத்துடன், தைரியத்துடன், நான் பேசிய முழு பகுதியின் ஆடியோவையும் பாஜக வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேற்கு வங்கத்தில் பாஜக 100 இடங்களை தாண்டாது என்பது உறுதி. இதை முன்பே சொல்லியிருக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்வேன்" எனக் கூறியிருக்கிறார்.