ஒருங்கிணைந்த ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி தான் தற்போதையை ஆந்திர முதல்வர். இவரின் தங்கை ஷர்மிளா. ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் போட்டியிட்ட போது அவரது கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஷர்மிளா.
தனது சகோதரர் ஆட்சியைப் பிடிக்க வேண்டி பாத யாத்திரையை நடத்தி மக்கள் மத்தியில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரபலம் அடைய முக்கிய காரணமாக இருந்தவர். தனது எளிமையான நடவடிக்கைகள் மூலம் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர் செய்த பிரச்சாரம் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடிக்க ஒரு கருவியாக இருந்தது.
இந்நிலையில் தனது சகோதரர் ஆந்திர மாநில முதல்வராகி ஒன்றரை ஆண்டுகள் கழிந்த நிலையில் தெலங்கானா மாநிலத்தில் அவரது கட்சி ஒரு இடத்தைக் கூட பிடிக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. இப்படியான நிலையில் தான் ஷர்மிளா புதிய கட்சியைத் துவங்க இருக்கிறார். அவரின் கட்சி முழுக்க முழுக்க தெலங்கானவை மையம் கொண்டு செயல்படும் என்று அறிவித்துள்ளார். நேற்று தெலங்கானாவின் கம்மம் பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியவர், அதில் தனது கட்சித் தொடங்கும் தேதியை அறிவித்துள்ளார்.
அதன்படி, ஜூலை 8 ஆம் தேதி தெலுங்கானாவில் தனது சொந்தக் கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவைகள் முறையாக அறிவிக்கப்படும் என்றவர், முதல் கூட்டத்திலேயே ஆளும் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியை கடுமையாக தாக்கி பேசினார். ``தெலங்கானா முதல்வரை எதிர்க்க ஒரு கட்சி கூட இங்கு இல்லை. எங்கள் கட்சி சந்திசேகர ராவின் கட்சியை கேள்வி கேட்கும். என்னை எல்லோரும் வெளியில் இருந்து வந்தவர் என்கின்றனர்.
இல்லை அது தவறு. நான் 100% தெலுங்கானாவின் மகள். நான் தெலுங்கானா காற்றை சுவாசித்தவள். இங்கு தான், இந்த நிலத்தில்தான் வளர்ந்தேன். என் மகளும் மகனும் இங்குதான் பிறந்தார்கள். எனவே, இந்த நிலத்திற்கு நன்றியைக் காட்டுவதும், இங்குள்ள மக்களின் நலனுக்காக உழைப்பது தான் எனது கடமை. எனது கட்சி முழுக்க முழுக்க தெலங்கானா மக்களுக்காக, நலனுக்காக உழைக்கும்" என்றார்.
முன்னதாக, பொதுக்கூட்டத்தில் ஷர்மிளா கட்டியிருந்த கை கடிகாரம் கவனம் ஈர்த்தது. கருப்பு பட்டையுடன் கூடிய பழைய டைப்பிலான அந்த கடிகாரம் அவரின் தந்தை ராஜசேகர ரெட்டி கட்டியிருந்தது. அதை செண்டிமெண்ட் கருதி அதைக்கட்டி ஷர்மிளா கூட்டத்துக்கு வந்திருந்தார்.