முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் தங்களது சொந்த ஊர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பிச் செல்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மும்பை உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இருப்பினும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஐந்தரை லட்சத்தை தாண்டி உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த அம்மாமாநில அரசு முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமென்றாலும் வெளியாகலாம் என தெரிகிறது.
இந்நிலையில், முழு ஊரடங்கு அச்சம் காரணமாக மும்பை, தானே, புனே நகரங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதனால் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. உத்தரபிரதேசம், பீகார் போன்ற வடமாநில ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால், வடமாநிலங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய முன்டியடிக்க வேண்டாம் என மத்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. பயணிகள் வசதிக்காக கோடை காலத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டள்ளது.
கடந்த ஆண்டு மார்ச்சி மாதம் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொது போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டதால், தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே சென்றனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.