உத்தரகாண்டில் இந்த ஆண்டுக்கான கும்பமேளா நிகழ்ச்சியில் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பாவ்ரி பகுதியில் கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கடந்த மாதம் மார்ச் 11 ஆம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு முதல் புனித நீராடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன்படி, தினமும் காலை 7 மணியில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஒரே இடத்தில் குவிந்து வருகின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் விதிமுறைகளும் முறையாக கடைபிடிக்காமல் இருந்தன. இந்த நிலையில், கும்பமேளாவில் கடந்த 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உத்தரகண்ட் மாநில அரசு தெரிவித்துள்ளது. ஹரித்வாரில் இருந்து எடுக்கப்பட்ட சுமார் 50,000 மாதிரிகளில், திங்களன்று 408 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 594 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுளளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக பேசியுள்ள கும்பமேளா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சித்தார்த் சக்ரபாணி என்பவர், `கடவுள் மீதான வலுவான நம்பிக்கையின் காரணமாகவே கங்கையில் நீராட இவ்வளவு பேர் இங்கு வந்துள்ளனர். கங்கை கொரோன தொற்றுநோயிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் நம்புகிறார்கள்" என்று கூறியிருக்கிறார். அங்கு வரும் பக்தர்களும் இதை தான் கூறுகின்றனர்.