உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளாவில் கலந்து கொண்ட 13 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கொரோனா அதிகரிக்க அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஹரித்வாரில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய மகாகும்பமேளா வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கும்பமேளாவில் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கானவர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கே வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது, முக கவசம் அணிவது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. எனினும் அளவுக்கதிகமாக பக்தர்கள் குவிவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்டில் நடந்துவரும் கும்பமேளாவில் 3-வது சாஹி புனித நீராடுதலில் நேற்று ஒரே நாளில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் உச்சபட்சமாக 1,953 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் டேராடூனில் 796 பேர், ஹரித்துவாரில் 525 பேர், நைனிடாலில் 205 பேர், உதம் சிங் நகரில் 118 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இரண்டு நாட்களில் கும்பமேளாவில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் மட்டும் நாளொன்றுக்கு 50 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த புனித நீராடாலுக்குச் சென்று வந்த மக்கள் மீண்டும் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்து உள்ளனர்.