கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்தியாவில், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து 2 வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இன்று புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,761 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக அதிகரித்துளளது.
இந்நிலையில், கொரோனா பாதிப்புகளை தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி மருத்துவர்களுடன் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து நாட்டிலுள்ள முன்னணி மருந்து நிறுவனங்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, அடுத்த மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு காணொலி காட்சியின் வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது