ஆர்.டி. - பி.சி.ஆர் சோதனையில் சிக்காத கொரோனா - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

by Madhavan, Apr 24, 2021, 09:13 AM IST

ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் புதிய உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய முடிவதில்லை என டெல்லியில் உள்ள ஹெல்வேதியா மருத்துவ மையத்தின் டாக்டர் சவுரதீப்த சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் என்பது பல மடங்கு வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளன. பொதுவாக கொரோனா வைரஸை உறுதிபடுத்த, ஆர்டி பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் ஒரு நபருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிபடுத்தி விடலாம். ஆனால், ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் புதிய உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய முடிவதில்லை என டெல்லியில் உள்ள ஹெல்வேதியா மருத்துவ மையத்தின் டாக்டர் சவுரதீப்த சந்திரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், ``கொரோனா வைரஸானது இரண்டு மற்றும் மூன்று வகையில் உருமாறி காணப்படுகிறது. இவற்றின் வடிவமைப்பில் ஏற்பட்ட மாற்றத்தினால், ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனையில் அவற்றை கண்டறிய முடிவதில்லை. இந்த புதிய வகைகள், புதிய அறிகுறிகளை தோற்றுவிக்க கூடியவையாக காணப்படுகின்றன.

வழக்கம்போல் காணக்கூடிய அறிகுறிகளான வறட்சி, உடல் வலி, காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவற்றுடன் கூட வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தோலில் புண் ஏற்படுதல், குழப்ப நிலை, கை மற்றும் கால் விரல்களின் நிறங்கள் நீல நிறத்திற்கு மாறுதல், மூக்கு மற்றும் தொண்டை வழியே ரத்தம் வருதல் போன்றவையும் காணப்படுகின்றன.

முதல் அலையை விட நாட்டில் 2வது அலை ஆபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது. பரிசோதனை மையங்கள் உள்பட கூட்ட நெருக்கடியான இடங்களில் மக்கள் ஒன்று கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் புதிய வகை உருமாறிய வைரசானது எளிதில் தொற்றும் தன்மை கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

ஒரு சில வாரங்களில் பாதிப்பு உச்சம் அடையும். அதன்பின்னர் குறையும். அதனால், மக்கள் கூட்ட நெருக்கடியான அனைத்து இடங்களையும் தவிர்க்க வேண்டும். தேவையற்ற பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

You'r reading ஆர்.டி. - பி.சி.ஆர் சோதனையில் சிக்காத கொரோனா - எச்சரிக்கும் மருத்துவர்கள்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை