கொரோனா தடுப்பூசி: இரண்டாம் டோஸ் போடவில்லை என்றால் என்னவாகும்?

by Ari, Apr 26, 2021, 20:06 PM IST

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் என இரண்டு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட பெரும்பாலான மக்கள் இரண்டாவது டோஸ் போட அஞ்சுகின்றனர். கொரோனா முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் விவேக் உள்ளிட்டோர் உயிரிழந்ததால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வதால் மரணம் ஏற்படவில்லை என மருத்துவர்கள் என்னதான் விளக்கம் அளித்தாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது ஊசி செலுத்திக்கொள்ளாவிட்டால் பாதிப்புகள் ஏற்படுமா என்ற சந்தேகம் மக்களிடையே நிலவுகிறது.

இந்நிலையில், இந்த சந்தேகம் குறித்து தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநராக பணியாற்றிய மருத்துவர் குழந்தைசாமி விளக்கம் அளித்துள்ளார். அதில், “தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பின்னர் அந்த நபருக்கு பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றால் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று கூறினார். முதல் தடுப்பூசியில் அந்த நபருக்கு ஏற்பட்ட கொரோனாவுக்கு எதிரான குறிப்பான நோய் எதிர்ப்பாற்றல் மேலும் பெருகுவதற்குத்தான் இரண்டாவது தடுப்பூசி செலுத்துகிறார்கள். அதனால், இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் அதனால் பாதிப்பில்லை. ஆனால் இரண்டாவது ஊசி செலுத்திக்கொள்வது கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு மேலும் அதிக உதவி செய்யும் என குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

You'r reading கொரோனா தடுப்பூசி: இரண்டாம் டோஸ் போடவில்லை என்றால் என்னவாகும்? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை