கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக மகளின் திருமண செலவுக்கு சேமித்து வைத்திருந்த 2 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் விவசாயி ஒருவர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள குவால் தேவியன் கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பலால் குர்ஜார். இவர் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கல்யாண வயதில் அனிதா எனும் மகள் இருக்கிறார். சம்பலால் குர்ஜார் தனது மகளின் திருமணத்திற்காக பல மாதங்களாக கஷ்டப்பட்டு 2லட்சம் ரூபாய் பணத்தை சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில் அவர் தனது மகளின் திருமணத்தைக் காட்டிலும், மக்களின் உயிர் பெரியது என கருதி அந்த 2 லட்ச ரூபாய் பணத்தை, மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டருக்காக நன்கொடையாக அளித்துள்ளார்.
சம்பலால் குர்ஜார் இந்த 2 லட்ச ரூபாய்க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மயங் அகர்வாலிடம் அளித்துள்ளார். இதன் மூலம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 2 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க முடியும் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சம்பலால் குர்ஜார் கூறுகையில், ''எனது மகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. என் மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்திட 2 லட்ச ரூபாய் சேமித்து வைத்திருந்தேன். அதை, என் மகளின் திருமண நினைவாக இப்போது மாவட்ட ஆட்சியரிடம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக நன்கொடையாக அளித்துள்ளேன். நிறைய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பரிதவித்து வருவதாக வரும் செய்திகள் என் தூக்கத்தை கெடுத்தது.
இந்த பணத்தை வைத்து மகளின் திருமண விழாவை விமர்சையாக நடத்துவதைக் காட்டிலும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக செலவிட்டது எனக்கு மிகுந்த மனநிறைவை தந்துள்ளது'' என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். விவசாயியின் இந்த செயலை பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். மனிதநேயம் இன்னும் உயிரோடிருக்கிறது என கருத்துகளை தெரிவித்துள்ளனர்.