கொரோனாவை ஓடவிட்ட 105வயது முதிய தம்பதி - நம்பிக்கை சம்பவம்!

by Madhavan, Apr 27, 2021, 19:35 PM IST

மஹாராஷ்டிராவில் 105 வயது முதியவரும் 95 வயதுடைய அவரது மனைவியும் கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருப்பது நெகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியா பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என அனைவரையும் பாதித்து வருகிறது கொடிய கொரோனா தொற்று. கடந்த ஆண்டு தொடக்கத்தில் தொற்றிய கொரோனா தொற்றால் முதியவர்கள் பலரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றிலிருந்து முதியவர்கள் இருவர் தப்பித்து வந்துள்ளனர்.


கொரோனாவால் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிராவில் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த 105 வயது முதியவர் தேனு சவானும், அவரது மனைவி மோட்டா பாய்யும் நம்பிக்கையுடன் இருந்து கொரோனாவிலிருந்து மீண்டு வந்திருக்கின்றனர். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த தம்பதியை குடும்பத்தினர் லாதூரில் உள்ள விலாஸ்ராவ் தேஷ்முக் மருத்துவமனையில் சேர்த்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்த முதிய தம்பதி ஆக்சிஜன் உதவியுடன்தான் சுவாசித்துள்ளனர்.
இந்நிலையில், இருவரும் நம்பிக்கை மற்றும் மன உறுதியுடன் இருந்து கொரோனாவை வென்று மீண்டு வந்துள்ளனர்.

கொரோனாவை வென்ற தம்பதியின் மகன் பேசுகையில், “எனது பெற்றோர் விவசாயிகள். எப்போதும் சுறுசுறுப்பாக வயலில் உழைத்துக்கொண்டே இருப்பாகள். நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம். எங்கள் வீட்டில் எனது பெற்றோரோடு மூன்று குழந்தைகள் என மொத்தம் 5 பேர் கோரோனாவால் பாதிக்கப்பட்டனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தோம். கொரோனாவால் அதிகமாக முதியவர்கள்தான் இறக்கிறார்கள் என்ற தகவல் கொஞ்சம் கவலையைத்தான் கொடுத்தது. ஆனால், எனது பெற்றோர் மிகவும் உறுதியுடன் இதிலிருந்து மீண்டு வருவோம் என்று நம்பினார்கள். அதன்படியே , மீண்டு வந்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது” என்று உற்சாகமுடன் பேசியிருக்கிறார். அவர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் “சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்ததால் இருவரையும் காப்பாற்ற முடிந்தது. இருவருக்கும் கொரோனா தடுப்பூசியும் போடப்பட்டது” என்று தெரிவித்திருக்கிறார்கள்.

You'r reading கொரோனாவை ஓடவிட்ட 105வயது முதிய தம்பதி - நம்பிக்கை சம்பவம்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை