`அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகள் பின்னால் ஓடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேவ் அம்மாநில இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
திரிபுரா முதல்வரான பிப்லப் குமார் தேவ் தான், தற்போது இந்திய அரசியலின் ஹாட்-டாப்பிக். அவர் சில வாரங்களுக்கு முன்னர், `இணையதளம் மற்றும் செயற்க்கைகோள் வசதி மகாபாரத காலத்திலேயே இருந்தன. இப்போதுதான் அது பொதுத் தளத்திற்கு வந்துள்ளது’ என்று கூறி விமர்சனங்களை வாரிக் கொட்டிக் கொண்டார்.
மேலும் சில நாட்களுக்கு முன்னர், `சிவில் இன்ஜினியர்கள்தான் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத வேண்டும். ஏனென்றால், சிவில் சர்வீஸ் மூலம் சமூகம் கட்டமைக்கப்படுகிறது. எனவே, சிவில் இன்ஜினியர்கள்தான் அதற்கு பொறுத்தமாக இருப்பர்’ என்று மீண்டும் ஒரு முத்தான விஷயத்தைச் சொல்லி அதிர்ச்சியைக் கிளப்பினார்.
இந்நிலையில் இன்று திரிபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், `இந்தக் கால படித்த இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க அஞ்சுகின்றனர். தொழில் தொடங்குவதை விட்டுவிட்டு, அரசு வேலைகளுக்கு ஆசைப்பட்டு பல ஆண்டுகள் அரசியல்வாதிகள் பின்னால் அலைகின்றனர்.
இதனால், அவர்களின் இளமைக் காலம் வீணாகிறது. இப்படி நேரத்தை விரயமாக்குவதை விட்டுவிட்டு, சொந்தமாக தொழில் தொடங்க இளைஞர்கள் முன்வர வேண்டும்’ என்று திடுக் அட்வைஸ் கொடுத்துள்ளார். ஒரு மாநிலத்தின் முதல்வரே இளைஞர்கள் குறித்து இப்படி பேசியிருப்பது மீண்டும் பிப்லப்பை டிரெண்டிங் டாப்பிக்காக மாற்றியுள்ளது.