மோடியின் உலக நாடுகளின் பயணத்துக்கு ஆகும் செலவு கணக்கை உடனடியாக ஏர் இந்தியா தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உலக சுற்றும் வாலிபனாக ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர் நடிக்கத்தான் செய்தார். ஆனால், உலகம் சுற்றும் வாலிபனாகவே உலக மக்களுக்கு வாழ்ந்து காட்டிய உன்னதத் தலைவர் நமது பிரதமர் மோடி.
இந்திய நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற காலத்திலிருந்து இதுவரையில் உலக வரைபடத்தில் நாம் காணாத நாடுகளுக்கெல்லாம் தேடிச் சென்று நட்பு வட்டம் பிடித்து வருகிறார் பிரதமர் மோடி.
இதுகுறித்து நாட்டு மக்கள் அனைவரும் கேல்வி எழுப்பினாலும் விமர்சனங்களை முன்வைத்தாலும் மீம்களாகப் போட்டு கேலி செய்தாலும் சற்றும் தளராத பிரதமர் உலக நாடுகளின் நட்புப் பட்டியலில் இந்தியத் திருநாட்டை இணைத்தேத் தீருவேன் என்ற மகோன்னத குறிக்கோளுடன் கஷ்டப்பட்டு பயணமாகிறார்.
ஆனால், இந்தியத் தலைமை தகவல் ஆணையம், ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்துக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமரின் உலக நாடுகள் சுற்றுலாவுக்காக, மன்னிக்கவும்...! உலக நாடுகள் சுற்றுப்பயணத்துக்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது? என்பது குறித்த தகவலை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் பிரதமரின் சுற்றுப்பயணச் செலவுகள் அமையும் என்பதால் மக்களிடம் இத்தகவலை தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.