`இது ஒரு துக்க நாள்…- பாஜக மீது வெறுப்படைந்த பினராயி விஜயன்

by Rahini A, May 17, 2018, 10:29 AM IST

கர்நாடகாவில் பாஜக-வின் எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி இருந்தாலும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சிக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருந்தது.

இதனால், மும்முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 222 தொகுதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டன. பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மஜத 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ்-மஜத கூட்டணி வைத்தன. அதே நேரத்தில், `நாங்கள் தான் தனிப் பெரும் கட்சியாக விளங்குகிறோம். எனவே எங்களைத்தான் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும்’ என்று பாஜக தரப்பு கூறியது.

பாஜக-வால் நியமிக்கப்பட்ட கவர்னர், எதிர்பார்த்தது போலவே எடியூரப்பாவை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். எடியூரப்பா, இன்னும் 2 வாரங்களில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பெரும்பான்மைக்கு இன்னும் 8 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்படுகின்றனர் என்பதால், பாஜக குதிரைபேரத்தில் ஈடுபடும் என்று பரவலாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அரசியல் கேலிக் கூத்தைப் பார்த்து நாடே சிரித்து வரும் நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், `கர்நாடகாவுக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் இன்று துக்கநாள். மத்திய அரசு சொல்வதையெல்லாம் கேட்கும் ஆளுநர்கள் அவர்களின் பதவிக்கான மாண்பை கொச்சப்படுத்துகின்றனர்.

பாஜக-வை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டும். ஆளுநரின் இந்த முடிவு குதிரைபேரத்துக்கு வழிவகுத்துள்ளது’ என்று குமுறியுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading `இது ஒரு துக்க நாள்…- பாஜக மீது வெறுப்படைந்த பினராயி விஜயன் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை