குஜராத்: குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், பிரதமர் மோடி&ராகுல் காந்தி ஆகியோர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 9ம் தேதி நடைபெற்றது. மொத்தம் 89 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. இதில், 68 சதவீதம் வாக்குபதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வரும் 14ம் தேதி மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபறெ உள்ளதால் பிரதமர் மோடி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரது பிரசாரம் ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருவதால் தேர்தல் தீவிரமடைந்து வருகிறது.
மத்திய குஜராத்தில் உள்ள லூனாவாடா என்ற இடத்தில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி,” என்னை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து வருகிறது. என்னை மோசமாக சித்தரிக்கிறார்கள். குஜராத் மண்ணின் மைந்தனான என்னை இப்படி அவமதிப்பு செய்கிறார்கள். இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ள சல்மான் நிசாமி ட்விட்ட் மூலம் என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். அதில், ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி, அவருடைய பாட்டி இந்திரா காந்தி என குறிப்பிட்டு மோடிக்கு தாய்&தந்தை யார்? என்று கேட்டு இருக்கிறார்.
நாம் எதிரிகளிடம் கூட இது போன்ற கேள்விகளை கேட்க மாட்டோம். நான் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பதால் என்னை அவமதிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு நான் ஒன்றை சொல்லி கொள்கிறேன். பாரத மாதாதான் எனது தாய்&தந்தை. எனது வாழ்க்கை முழுவதையும் பாரத மாதாவுக்கு சேவை செய்வதற்கு அர்ப்பணித்துள்ளேன். எனது ஒவ்வொரு செயல்பாடும் 125 கோடி இந்திய மக்களுக்காக இருக்கும். என்னை விமர்சித்த சல்மான் நிசாமி இந்திய ராணுவ வீரர்கள் கற்பழிப்பில் ஈடுபடுபவர்கள் என்று கூறியவர். நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவை பாராட்டியவர். அப்சல் குரு போன்றவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் வேண்டுமா?. இது போன்றவர்களை குஜராத்தில் அனுமதிக்க வேண்டுமா ?” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
குஜராத்தில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி பிரதமரை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ குஜராத்தில் இப்போது நடைபெறுவது சட்டசபை தேர்தல். இது பிரதமருக்கான தேர்தல் அல்ல. அல்லது பாரதிய ஜனதா&காங்கிரசுக்கான தேர்தலும் அல்ல. ஆனால், பிரதமர் மோடி குஜராத் மாநில வளர்ச்சி பற்றி தனது பிரசாரத்தில் எதுவுமே பேசுவதில்லை. நீங்கள் குஜராத் வளர்ச்சிக்கு என்ன திட்டத்தை வைத்து இருக்கிறீர்கள்?. குஜராத் மக்களுக்கு என்ன செய்ய போகிறீர்கள்? அடுத்த 100 ஆண்டுகளுக்கு குஜராத்தை பாரதிய ஜனதாதான் ஆளும் என்று மோடி சொல்கிறார்.
ஆனால் குஜராத் எதிர்காலம் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அவர் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சீனா மற்றும் உலக பிரச்னைகளை எல்லாம் பேசுகிறார். 22 ஆண்டுகளாக இங்கு பாரதிய ஜனதா ஆண்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் நீங்கள் மக்களுக்கு செய்ததை சொல்லுங்கள்” என்று ராகுல் காந்தி பிரசாரத்தில் பேசினார்.