பிஹாரில் எப்போதும் முதல்வர் நிதிஷ்குமாரின் ராஜ்யம் தான் நடக்கும் என ஐக்கிய ஜனதா தள மூத்தத் தலைவர் தெரிவித்துள்ளார்.
பிகார் மாநிலத்தில் பாஜக-வும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளமும் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. இந்நிலையில், அவர்கள் உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன்னர் வட மாநிலங்களில் இருக்கும் பல்வேறு தொகுதிகளின் 10 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. இந்த 10 தொகுதிகளிலும் மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக, தோல்விகண்டது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் நடந்த இடைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக தோல்வியடைந்திருப்பது, முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனதா தளத்தின் நிர்வாகிகள் நேற்று பாட்னாவில் இருக்கும் நிதிஷ் குமார் வீட்டில் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜனதா தளத்தின் பொதுச் செயலாளர் பவன் வர்மா, `நிதிஷ் குமார் தான் பிகார் மாநிலத்தில் பாஸ். அதனால் தான் அவர் இங்கு முதல்வராக இருக்கிறார்.
பாஜக- ஜனதா தள கூட்டணியில், எங்களுக்குத் தான் அதிக எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள் என்பது நினைவில் இருக்கட்டும்' என்றார். இது டெல்லி அரசியலில் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாஜக- ஜ.த இடையில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.