மத்திய அரசின் கூடுதல் செயலர் பதவிக்கு நேரடியாக வெளியில் இருந்த ஆள் எடுக்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. 10 அரசு துறைகளில் கூடுதல் செயலர் பதவிக்கு தனியார் துறையிலிருந்து எடுக்கும் முடிவை அறிவித்துள்ளது மத்திய அரசு. யூ.பி.எஸ்.சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஐ.ஏ.எஸ் லெவல் அதிகாரிகள் தான் குறிப்பாக இந்த பதவிக்கு வர முடியும் என்கிற நிலை உள்ளது.
ஆனால், தற்போது இதை மாற்றும் வகையில் விதிகள் திருத்தப்பட்டு உள்ளன. பல ஆண்டுகளாக தனியார் துறையில் மிகச் சிறப்பாக விளங்கும் நபர்களை அரசு துறைகளில் நேரடியாக வேலைக்கு எடுக்கும் நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இது குறித்து தற்போது தான் ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. `புதிய யோசனைகள் மற்றும் நடைமுறைகளை அமல்படுத்தும் நோக்கில் தான் இந்த விதிமுறை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது' என்று தெரிவித்துள்ளது அரசு தரப்பு.
நிதித் துறை, வருவாய் துறை என்ற பல்வேறு துறைகளில் கூடுதல் செயலர்கள் இந்த முறை மூலம் பணிக்கு அமர்த்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு குறித்து பல தரப்புகளிலிருந்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.