இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவை, அவர் சொத்துக்களை முடக்க வங்கிகளுக்கு ஆன வழக்கு செலவு பணத்தை உடனடியாக செலுத்தும்படி இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விஜய் மல்லையா இந்தியாவைச் சேர்ந்த சுமார் 13 வங்கிகளில் 9,000 கோடி கடன் பெற்று அதைத் திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவரைப் இந்திய அதிகாரிகள் பிடித்து விசாரிப்பதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு தப்பியோடினார்.
அங்கிருந்து அவரை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர, அரசு தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால், இதுவரை அது நடக்கவில்லை. இந்நிலையில் 9,000 கோடி கடனை திரும்பவும் செலுத்தாததால் உலகம் முழுவதும் இருக்கும் அவரின் சொத்துகளை முடக்க வழக்கு தொடர்ந்தன வங்கிகள்.
இதை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வாதாடியது மல்லையா தரப்பு. ஆனால், கடந்த மாதம் 8 ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், '13 வங்கிகள் மல்லையாவின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதைத் தடுக்க முடியாது' என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று நீதிமன்றம், 'சொத்துக்களை முடக்க வங்கிகளுக்கு ஆன வழக்கு செலவுக்கு மல்லையா 200,000 பவுண்டுகளை உடனடியாக செலுத்த வேண்டும்' என்று ஆணையிட்டுள்ளது.