காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட தேர்தல் நெருங்கி உள்ள நிலையில் இன்றுடன் தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கின்றன. இதில், முதல்கட்ட தேர்தல் கடந்த 9ம் தேதி 89 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், 68 சதவீதம் வாக்கு பதிவாகின. அடுத்ததாக, வரும் 14ம் தேதி 2ம் கட்ட தேர்தல் மீதமுள்ள 93 தொகுதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் கடந்த 10ம் தேதி முதலே பல்வேறு இடங்களில் நடந்தது.
தேர்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவராக தேர்வாகி உள்ள ராகுல் காந்தி ஆகியோர் பல இடங்களில் பிரசாரம் நடத்தி வந்தனர். பிரசாரத்தில் ஒருவொருக்கொருவர் விமர்சித்துக் கொண்டனர். தீவிரமாக நடைபெற்று வந்த பிரசாரத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது கடைசி நாளான இன்று காலை அனைத்து கட்சி வேட்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆதரவு திரட்டினர்.
இன்று மாலை பிரசாரம் முடிந்ததும் அனைத்து வாக்குச்சாவடிகளும் துணை நிலை ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால், 14ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைப்பெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், 18ம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றே குஜராத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்று தெரிந்துவிடும்.