போக்குவரத்து நெரிசலுக்கு அதிருப்தி தெரிவிக்கும் விதமாக பெங்களூருவில் மென்பொருள் பொறியாளர் ஒருவர், குதிரையில் வேலைக்கு சென்றார். அந்தப் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் ரூபேஷ் குமார் வர்மா. தினமும் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தை, அவரை வெகுசிரமத்திற்குள்ளாக்கியது.
சில இடங்களில் 30 முதல் 40 நிமிடங்கள் வரை காத்திருப்பது அவருக்கு வெறுப்பை கிளப்பியது. தனது அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக பேண்ட், ஷர்ட் அணிந்து, கால்களில் ஷூ மாட்டி, லேப் டாக் பேக்கை தோளில் போட்டுக்கொண்டு வெள்ளை குதிரையில் வேலைக்குக் கிளம்பி விட்டார் ரூபேஷ் குமார் ஷர்மா!
அவர் குதிரையில் செல்லும் காட்சியை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தவர்கள் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவவிட்டனர். “மென்பொருள் பொறியாளராக கடைசி பணி நாள்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அட்டையை அவர் குதிரையில் தொங்கவிட்டிருந்தார்.
பெங்களூருவில் தான் எட்டு ஆண்டுகள் பணி செய்து வருவதாகவும், பெங்களூரு நகரம் அதிக மக்கள்தொகையால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இருப்பது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறிய ரூபேஷ் குமார், தான் குதிரையில் சென்றது இவ்வளவு பரபரப்பை கிளப்பும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
சாஃப்ட்வேர் எஞ்ஜினியர் வேலையை விட்டு விட்டு தாம் ஒரு நிறுவனத்தை தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.