ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சாந்தா கோச்சார் நீண்ட விடுப்பில் சென்றுள்ளார்.
வங்கியின் அன்றாட செயல்பாடுகளை நிர்வகிக்கும்படி, தலைமை செயலாக்க அதிகாரியாக (சிஓஓ) சந்தீப் பக்க்ஷி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிஐசிஐ வங்கி, வீடியோகான் நிறுவனத்திற்கு பெருந்தொகை கடன் வழங்கியதில் சாந்தா கோச்சாருக்கு ஆதாய நோக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது குறித்து முதனிலை விசாரணைக்கான பதிவை மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) செய்துள்ளது.
தனது அதிகாரி மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்திருந்த ஐசிஐசிஐ இயக்குநர் குழு, தற்போது அலுவலகத்தின் உள்விசாரணை முடியும்வரை சாந்தா கோச்சார் விடுப்பில் இருப்பார் என தெரிவித்துள்ளது.
இவரது பதவி காலம் அடுத்த ஆண்டு மார்ச் வரையுள்ள நிலையில், ஐசிஐசிஐ புரூடென்ஷியல் காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சந்தீப் பக்க்ஷி, ஐசிஐசிஐ வங்கியின் சிஓஓ பதவியில் அமர்த்தப்பட்டுள்ளது சாந்தா கோச்சாரின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.