உத்தர பிரதேச மாநில ஹப்பூர் மாவட்டத்தில் பசுவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 65 வயது முதியவரை ஒரு கும்பல் தாக்கியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். பசுவதை செய்ததாக கூறி சில அடிப்படைவாத அமைப்புகள் தொடர்ந்து பலரை தாக்கி வருகிறது. இதைப் போன்ற ஒரு சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்தது.
அப்போது 45 வயது மதிக்கத்தக்க காசிம் என்பவரை, ஒரு அடிப்படைவாத கும்பல் பசுவதை செய்ததாகக் கூறி தாக்கியது. காசிம் தாக்கப்பட்டது வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவத்துக்கான போட்டோ வெளியானதால், போலீஸ் மீதும் பலத்த விமர்சனம் எழுந்தன. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காசிம் இறந்துவிடுகிறார். காசிம் விஷயத்தை சரியான முறையில் கையாளததற்கு மன்னிப்பு கோரியது உத்தர பிரதேச காவல் துறை.
இந்த சம்பவம் முடிந்த அடுத்த சில நாட்களிலேயே, சமியுதீன் என்ற 65 வயது முதியவரை பசுவதை செய்ததாக கூறி ஒரு கும்பல் தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இது தொடர்பாக இருவரை கைது செய்துள்ளது போலீஸ்.
இது ஒரு புறமிருக்க இந்த இரண்டு சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் டெல்லியில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில், ‘இரண்டு சம்பவங்களிலும் போலீஸ், உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறது’ என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்.