மும்பை உள்பட மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நடவடிக்கை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால், பல்வேறு இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மகராஷ்டிரா மாநிலத்தில் மும்பை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பிளாஸ்டிக் பைகள், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கப், கரண்டி, போர்க், தட்டு உள்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறுபவர்கள் முதல் முறையாக இருந்தால் ரூ.5000ம் 2வது முறையாக இருந்தால் ரூ.10,000ம் 3வது முறையாக இருந்தால் ரூ.25,000ம் அபராதத்துடன் 3 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது. அதன்படி, நேற்றைய முதல் நாளில் மட்டும், ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறுகையில், “பிளாஸ்டிக்கை பொறுப்பான வகையில் பயன்படுத்த வேண்டும் என்பது தான் அரசின் விருப்பம். எனவே தான், சேகரிக்க முடியாத மற்றும் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.